புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, January 26, 2013

பொள்ளாச்சி அருகில் உள்ள தமிழ்ப்பற்றுமிக்க கிராமம் ♥


பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர். கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் அனைத்தையும் தமிழ் முறைப்படி கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.

நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களையும் ஆங்கில மோகம் ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகள் அளித்தாலும், ஆங்கிலம் மீது இருக்கும் ஈர்ப்பால், கிராமங்களில் கூட தமிழ் வாசகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு நாகூர் கிராமத்தில் தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டி, தமிழ் மீதுள்ள ஆர்வத்தை வெளிகாட்டியுள்ளனர், கிராம மக்கள். ஊராட்சியில், மொத்தம் 12 வீதிகள் உள்ளன. அனைத்திற்கும், சித்திரை வீதி, வைகாசி வீதி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இதுதவிர, கிராமத்திலுள்ள கோவில் நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.

வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: பல ஆண்டுகளாக ஊராட்சியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், நிர்மல் புரஸ்கார் விருதுக்கு இந்த ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அப்போதுதான், ஊராட்சியிலுள்ள தெருக்களுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தலைவர்கள் பெயரை சூட்டினால், சாதி பெயரையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதால், முழுவதும் தமிழ் பெயராக சூட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 12 வீதிகளாக பிரித்து சித்திரை, வைகாசி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டினோம். தமிழ் மாத பெயராக சூட்டியதால், அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டனர். தமிழ் மீதுள்ள பற்று காரணமாக இதுபோல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு சூட்டியுள்ள பெயரை அரசும் அங்கீகரித்துள்ளது. இங்குள்ள கோவில்களில், கும்பாபிஷேகம், ஆண்டு விழா, அர்ச்சனை பூஜை உட்பட அனைத்து விசேஷங்களும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது. 

கோவில்கள் மட்டுமின்றி, வீட்டில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா என அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் முறையை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் மந்திரங்களின் விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், முற்றிலும் வட மொழி பெயர்களை தவிர்த்து அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வாறு, ராமசாமி கூறினார். கோவை மாவட்டத்திலேயே தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ள முதல் கிராமமாகிய வாழைக்கொம்பு நாகூரில், தமிழ் மணம் கமழ்கிறது. 

வழிபாட்டு தெய்வமாக குதிரை: வாழைக்கொம்பு நாகூரிலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. புதிதாக எழுப்பப்படும் கோவில்களிலும், குதிரை சிலைகள் கட்டாயம் நிறுவப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் ராமசாமி கூறுகையில், "அம்மனின் முக்கிய வாகனங்களில்,குதிரை உள்ளது. இதனால், அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்குள்ள கோவில்களில், நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வகையில், குதிரை சிலை வைத்து வழிபடுவது வழக்கம்' என்றார்.

Wednesday, January 23, 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......


மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான்  இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !!


இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!!!


Monday, January 14, 2013

கோபத்தில் வெளியிடப்படும் வார்த்தைகள் உயிரை கூட எளிதாக எடுத்துவிடும் !!!


ஒரு ராணுவ வீரன் தனக்கு திருமணமான உடன் பட்டாளத்துக்கு சென்று விட்டான். அவன் சென்ற சில மாதங்களிலே அவன் தந்தையான விவரம் தெரிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பத்து வருடங்கள் கழிந்து அவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது அவனது மனைவி மிகுந்த ஆர்வத்துடன் அவனை வரவேற்றாள். அன்னையின் பின்னே சற்றே மிரண்ட விழிகளுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான். தன் மகன் என்று உரிமையோடும் பெருமையோடும் அவனை பார்த்து கொண்டிருக்கும் போது அவன் தந்தையை கண்டு கொள்ளவே இல்லை. 

அவன் மனைவி அங்கிருந்து அகன்றதும் சிறுவன் வந்து வீரனிடம், நீங்கள் யார் என்று வினவினான். சற்றே அதிர்ச்சியடைந்தாலும், வேடிக்கை போல், கண்ணா நான் தான் உன் அப்பா என்றான் அவன். உடனே சிறுவன் கூறினான், இல்லை நீங்கள் இல்லை என் தந்தை. என் அப்பா எப்போதும் என் அம்மா கூடவே இருப்பார். அவள் நடந்தால் நடப்பார், அமர்ந்தால் அமர்வார் என்றான். வீரன் திகைத்து போய் விட்டான். சற்று நேரம் கழித்து வந்த மனைவியை வெறித்து நோக்கினான். பின்பு, அவன் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவே இல்லை. இதை கவனித்த மனைவிக்கு தாள முடியவில்லை. வாய் விட்டே கேட்டு விட்டாள் தன் அன்பு கணவனிடம். அதற்கு அவன், இவ்வளவு நாள் வந்தவன் வரவில்லை என்று என்னிடம் வந்தாயாக்கும் என்று கேட்டு விட்டான். இந்த சொல் கேட்டு அவள் உடனே தன உயிரை விட்டு விட்டாள். 

அவள் இறந்த ஈம கிரியைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவனுக்கு அவனது மகனின் செயல்கள் விசித்திரமாய் இருந்தது. அங்கும் இங்கும் தேடி கொண்டே இருந்தான். ஏற்கனவே இருந்த கோப கனல் முழுதும் அவன் மேல் திரும்பி என்னடா தேடுகிறாய் என்றான். அவன் அப்பாவை காணவில்லை என்றான். வீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன உளறுகிறாய் என்றான். அதற்கு அவனது நிழலை காட்டி. இவரை போல் ஒருவர் அம்மாவுடனே இருப்பார். அவர் தான் என் தந்தை. அம்மா தான் கூறினார்கள். இதோ இவர் தான் உன் தந்தை என.

தந்தையின் பிரிவு மகனை பாதித்து விட கூடாதென எண்ணி அவள், தன் நிழலை காட்டி இதுவே தந்தையென நம்ப வைத்திருந்தாள் அந்த சிறுவனை. ஏதும் அறியாது சந்தேகத்தால் தன் இல்லாளை வார்த்தையால் கொன்று விட்ட அந்த வீரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

வெனிஸ் நகரம் உருவான கதை உங்களுக்கு தெரியுமா?


இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள வெனிஸ் நகரம் பலருக்கும் தெரிந்த நகரம். இந்நகரத்தின் வணிகன் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் பற்றியும் அதில் வரும் ஷைலொக் எனும் வட்டிக்காரன் பற்றியும் பலரும் அறிந்திருப்பர். அந்நகரின் தெருக்களில் கார் ஓட முடியாது.

படகுதான் மிதந்து செல்லும் என்பதும் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் படகு வைத்து ஓட்டுகிறார்கள் என்பதும் தெருக்கள் என்பவையே நீர் ஓடும் வாய்க் கால்கள் தாம் என்பதையும், பலரும் தெரிந்து வைத்திருப்பர்.

அப்படியானால் நகரம் நீரின் மேல் கட்டப்பட்டதா? நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழந்ததா?பொது ஆண்டுக்கு 400 – 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறியவர்கள் தேர்ந் தெடுத்த இடமே நீர் நிறைந்த சதுப்பு நிலம்தான். ரோமானியப் பேரரசு நாடோடி இனத்தவரால் தாக்கப்பட்டு சிதைந்த பிறகு தெற்கு நோக்கி ஓடிவந்த மக்கள்தான் வெனிஸ் நகரில் குடியமர்ந்தனர்.

எதிரிகளின் படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் உபாயமாக இப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இங்கு மீன்பிடிப்பவரின் சிறு குடிசையைக் கூடக் கட்ட முடியாத நிலையில் சதுப்பு நிலம் காணப் பட்டது. பிறகு எங்கே கல்லா லான கட்டடங்களைக் கட்டுவது? ஆனாலும் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

ஆகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீளமான தூண்களைப் பூமியில் நட்டு கட்டடங்களைக் கட்டலாம் எனத் தீர்மானித்து தூண்களைப் புகுத்தி அடியில் உள்ள பாறைத்தரையைக் கண்டறிந்து அதன்மீது கட்டடம் கட்டலாம் என முயன்றனர். வெற்றி பெற்றனர். ஆனாலும் இது ஏதோ ஒரு சில மாதங்களில் வருடங்களில் நடந்த கதை அன்று.

பல நூற்றாண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற்றனர்.

ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்று சொல்வார்கள். அந்த வசனம் வெனிஸ் நகருக்கு மிகவும் பொருந்தக் கூடியது. வரலாற்றின் மத்தியக் காலத்தில்தான் கல்லாலான கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான அடித்தளமே ஆச்சரியம் தரக்கூடியது.

மிக நீளமான பைன் மரங்களும் லொர்ச் மரங்களும் வெட்டப்பட்டு அப்படியே சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன, வெண்ணெயில் தீக்குச்சிகளை நெருக்கமாக நட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரங்கள் நடப்பட்டு சதுப்பு மண் மறைக்கப்பட்ட மேலே அமைந்த சமதளத்தின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன. உண்மையில் சொன்னால், வீட்டைக் கட்டிப்பார் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும்.

வீடு கட்டியாகிவிட்டது. நீர் இருந்து கொண்டே இருந்ததை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்விக்கான பதிலாக வடிகால் அமைப்பு முறையைக் கண்டுபிடித்தனர். சிந்து வெளி நாகரிகத்திற்குச் சொந்தக்காரரான திராவிடர்கள் வடிகால் முறையைக் கண்டுபிடித்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஐரோப்பியர்களுக்கு அது பிடிபட்டு ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன.

நீர் மேற்பார்வையாளர் பதவியில் இருந்த கிரிஸ்டோ போரோ சபாடினோ என்பவர்தான் இம்முறையை ஒழுங்குபடுத்தி வாய்க்கால்களைச் சீரமைத்தார். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதைப்போல அவனவன் இஷ்டத்திற்கு வடிகால் வாய்க்கால்களை வெட்டவிடாமல் ஒழுங்குபடுத்தினார். வெனிஸ் நகரம் அழகே உருவான நகரமாக உருவாகப் பெரிதும் உதவினார்.

யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?


அரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.

பதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”

Sunday, January 6, 2013

கதவுகளே இல்லாத கிராமம் - புரியாத புதிர் !!!

ஷானி ஷிங்னபூர் [Shani Shingnapur] - மகாராஷ்டிராவில் உள்ள  ஒரு சிறிய கிராமம் . ஷிர்டியில் [Shirdi] இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம் .  
இந்த கிராமத்தில் எந்த ஒரு வீட்டிற்க்கும் கதவுகள் கிடையாது . கதவு வைக்க பிரேம்கள் இருக்கும் ஆனால் கதவு இருக்காது !!!. மேலும் மக்கள் எவரும் தங்களது பொக்கிஷங்களையும் விலைமதிப்புமிக்க பொருட்களையும் பூட்டி வைப்பது கிடையாது . அந்த கிராமத்தின் கடவுள் "ஷானி" அவற்றை பாதுகாப்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர் . அதையும் மீறி திருடுபவர்களை கடவுள் கடுமையாக தண்டிப்பார் என்று நம்புகின்றனர் ! 

இந்த கிராமத்தில் இது வரை எந்த பொருளும் திருடு போனதில்லை . அப்படியே ஏதேனும் களவு போனால் , அடுத்த நாளே அது மாயமாக வீடு வந்த சேருமாம் !!!

'Earphone' கலாச்சாரம்!


எப்படி தொத்திக் கொண்டதோ தெரியவில்லை,ஆனால் இன்று பெருநகரங்களில் வாழும் அநேக இந்திய இளைஞர்களை ஆட்கொண்டிருக்கிறது இந்த earphone மோகம் ! நெரிசல் மிகுந்த சாலையில் தங்கள் மோட்டார் வாகனங்களை செலுத்தும் போதும், காலைப் பொழுதில் அலுவலங்களை நோக்கி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போதும் earphone-ஐ காதில் மாட்டிக்கொண்டு தங்களுக்கென ஒரு தனி உலகத்தை படைத்து கொண்டு நடை போட தொடங்கி விட்டது இன்றைய இளைய சமுதாயம்.முன்பெல்லாம் பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்தில் அமர்ந்து வரும் பயணியிடம் இரண்டொரு வார்த்தை பேசி புன்னகைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து சுற்றி நடக்கும் விஷயங்களை வாயாலும் மனதாலும் அசைபோட்டு கொண்டு செல்வது நம்மூர் வாசிகளுக்கு வழக்கம். ஆனால் இன்றோ நாம் நகரப்பேருந்தில் ஏறிய மறுகணமே 'சுவிட்ச்' போட்ட இயந்திரம் போல் காதில் இந்தக் கருவியை மாட்டிக்கொண்டு அறிவுப்புலன்களை மூடிக்கொள்கிறோமோ என்ற ஐயம் எனக்கு! Earphone மாட்டிக்கொண்டு படுத்தால்தான் இரவுநேரங்களில் உறக்கமே வருவதாக கூறுகின்றனர் சில அன்பர்கள் !

பெருகி வரும் இந்த earphone கலாச்சாரம் ஆரோக்கியமானதா? தவிர்க்க முடியாத ஒன்றா? இதன் 'கிரியாஊக்கிகள்'(catalysts) என்னனென்ன? காரண காரியங்கள் (cause and effect ) என்னனென்ன? ஒரு குட்டி 'நீயா நானா'விற்கு உங்கள் அனைவரையும் வாயாட அழைக்கிறேன்! பணிவோடு...அன்போடு...ஆவலோடு ! கருத்துக்கள் பரிமாறப்படட்டும்!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் - 'Earphone' 'switch' இந்த இரண்டு ஆங்கில சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் எனக்கும் சொல்லி கொடுங்களேன்!

நன்றி : பூபேஷ்குமார் 

புரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை

கடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினைத்து இருந்த பலவற்றையும் வென்று காட்டியுள்ளான் மனிதன் . இருந்தாலும், மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன . அவற்றில் ஒன்றுதான் , லடாக்கில் உள்ள காந்தமலை .


காஷ்மீர் பகுதியில்  அமைந்துள்ளது இந்த இடம் . இந்த பகுதியில் ரோட்டில் ஒரு கட்டம் வரையப்பட்டிருக்கும் , அந்த கட்டத்தின் உள்ளே உங்களின் நான்கு சக்கர வாகனத்தை நியூட்ரல் கியரில்  நிறுத்தி விட்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருங்கள் . உங்களின் கண் முன்னே ஒரு ஆச்சர்யம் நடக்கும் :) . விதிப்படி பார்த்தல் இறக்கத்தில் இருக்கும் வண்டி பின்னோக்கி நகர வேண்டும் , ஆனால் உங்களது வண்டியானது முன்னோக்கி மேட்டில் 10-20 kmph வேகத்தில்  நகரும் !!! 

உங்களின் வண்டியின் எடையை பொருத்து அதன் வேகமும் இருக்கும் . கார்கள் மட்டும் அல்ல , இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும் இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் . சில ஆய்வாளர்கள் , இந்த நிகழ்வுகளை , பூமியில் இருந்து வரும்  சக்தி வாய்ந்த மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் . மற்றவர்கள் , இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusionஎன்றும் கூறுகின்றனர் .

எது எப்படியோ , இந்த வினோத நிகழ்வு , இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!

Friday, January 4, 2013

நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. 

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது

மூளை நன்கு செயல் பட என்ன சாப்பிடலாம் !!!


ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். 

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்