புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, February 26, 2013

வெயிலோடு விளையாடு!!!


வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.

சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

விஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்!) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா?’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.

பழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing) திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate) பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.

இப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும். பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர்! பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.

மோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது!

நன்றி : Borntowin

Sunday, February 17, 2013

தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!


தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!


* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.



* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...!!!


அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும்நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.



மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.


வியந்து தான் போவீர்கள் !!!


வியந்து தான் போவீர்கள்

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.



* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

----->படித்ததில் பிடித்தது 

Saturday, February 16, 2013

111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு


 சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு. ஆனால் 111 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.  



             அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர். அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார். மேலும் அவர் தனது குறிப்பில் “இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது” என்று எழுதி வைத்துள்ளார். 

            இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரியவைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 111 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. 

உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி



“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.




விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம். 

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “பிளைட் டேட்டா ரெகார்டர்”. இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “வாய்ஸ் ரெகார்டர்”. இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். 

வரலாறு :

 கறுப்புப் பெட்டியை  1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன்  என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார். 

சில ஆச்சர்யமான தகவல்கள் :

கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல “ஆரஞ்சு நிறம்

ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.

கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான். 

விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது. 

இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.


பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் !!!


பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்
===================================
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான். 

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான். 

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன. 

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது. 

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது. 

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும்  வளர்த்துக் கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்