புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, December 24, 2013

மாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் ! - புதிர் கதை

ஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த காவலாளி ஒருவனைக் கண்டார்.....அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.மிகவும் கலகலப்பாகவும் சாதுர்யமாகவும் பேசிய அவன் மேல் அரசர் ஈடுபாடு கொண்டார். 

வந்திருப்பது அரசன் என்று அறியாமல், கொஞ்ச நேரம் பேசியதும் அந்தக் காவலாளி, " நாம் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.இந்த நல்ல பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.வாருங்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடைக்குப் போய் மது அருந்துவோம்" என்றான்.

அதற்கு மாறுவேடத்தில் இருந்த அரசர், " பாதுகாவல் பணி புரியும் நீ, அதை விட்டுவிட்டு, மதுக்கடைக்குப் போகலாம் என்கிறாயா?....ஏதேனும் நடந்துவிட்டால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாயே"? என்றார்.


அதற்கு அவன், " ஒன்றும் நடக்காது. பக்கத்தில்தான் மதுக்கடை உள்ளது.இந்தத் தெருவில் சிறிய சப்தம் கேட்டால்கூட, நான் உடனே வரமுடியும். அதனால் வாருங்கள் போகலாம்" என்றான்.

அரசனும் அவனுடன் சென்றார். முதன்முறை இருவரும் சிறிதளவு குடித்தார்கள். மேலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காவலாளிக்கு ஏற்பட்டது.ஆனால் அவனிடம் பணம் போதுமானதாக இல்லை.அதனால் தனது உடைவாளை இடுப்பில் கட்டியிருந்த உறையில் இருந்து எடுத்து மதுக்கடைக்காரனிடம் கொடுத்து , " இதை ஈடாக வைத்துக்கொண்டு மேலும் மது கொடுங்கள். காலையில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வாளை வாங்கிக் கொள்கிறேன்" என்றான். அதற்கு கடைக்காரனும் சம்மதித்து, வாளைப் பெற்றுக்கொண்டு மது வகைகளைக் கொடுத்தான்..அதைக் கண்ட அரசர், " இது தவறல்லவா?..ஏதேனும் அவசரம் என்றால் வாள் இல்லாமல் நீ என்ன செய்வாய்" என்று கேட்டார்.

அதற்கு அவன், சிரித்தபடி பக்கத்தில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, வாள் போலச் செய்து வாள் உறையில் வைத்துக்கொண்டே"அந்த வாளுக்குப் பதிலாக இந்த மரவாள் ஒன்றை வைத்துக்கொண்டே நிலைமையை நான் சமாளிக்கமுடியும். நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்றான்.

இருவரும் குடித்து முடித்து வெளியில் வந்தார்கள். காவலாளியிடம் விடை பெற்ற அரசர், ரகசிய வழியாக அரண்மனை திரும்பினார்.

சிறிது நேரத்தில் அரண்மனையில் ஆராய்ச்சி மணி அடிக்க ஆரம்பித்தது. 
ஏதேனும் அவசரம் இருந்தால்தான் அந்த மணி ஒலிக்கும் என்பதினால், அரண்மனைக்குப் பக்கமாகக் காவல் இருந்த வீரர்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடினார்கள். 

அங்கே அரசர் ஒரு அமைச்சரை எதிரில் நிற்கவைத்து, கோபமாக ஏதோ கூறிக்கொண்டே, காவலாளிகளைப் பார்த்தார். 
மதுக்கடையில் வாளை ஈடாக வைத்த காவலாளியும் அங்கே நின்றான். அவனை அடையாளைம் கண்டு கொண்ட அரசன், அவனை அழைத்து, " வீரனே,,,,,,எனக்குத் துரோகம் செய்த இந்த அமைச்சனை உடனே என் கண்ணெதிரிலேயே உன் வாளால் வெட்டிக்கொன்றுவிடு. இது அரச கட்டளை" என்றார்.

அந்தக் காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தன்னிடம் இருப்பது மரவாள் என்று அரசனுக்குத் தெரிந்தால், முதலில் தன் தலைதான் உருளும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், " அரசே..........அமைச்சர் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார். தீர விசாரித்தபிறகு நாளைக் காலையில் தாங்கள் தண்டனை அளிக்கலாமே" என்றான்.

அதைக் கேட்டதும் அரசன் உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சூழ்நிலையை அவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று பார்க்கும் ஆவலில், " எனக்கே அறிவுரை சொல்கிறாயா???????
.நீ உன் வாளை எடுத்து உடனே அமைச்சனை வெட்டி வீழ்த்தாவிட்டால், மற்றக் காவலாளிகள் உனது தலையை வெட்டிவிடுவார்கள்.... என்றார்.

இந்த நேரத்தில் ஒரு யுக்தி அவனுக்குப் பளிச்சிட்டது. அதன்படி செய்தான் அந்தக் காவலாளி. அவனது யுக்தியைக் கண்ட அரசன் அமைச்சரை விடுதலை செவதாகக் கூறினான்.

பிறகு அவனது புத்தி சாதுர்யத்தை மெச்சிய அரசன், தான் அவனது புத்திசாலித்தனத்தைச் சோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தியதாகக் கூறி, அவனை பாராட்டினார். 
ஆனால் அவன் வாளை ஈடாக வைத்து கடமை செய்யும் நேரத்தில் மது அருந்திய குற்றத்துக்காக, அதற்குரிய தண்டனையை 
அனுபவித்தபின்பு, அவனையும் தனது அமைச்சர்களில் ஒருவனாக வைத்துக்கொண்டார்.


நண்பர்களே..................காவலாளி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன யுக்தி செய்து தானும் அமைச்சரையும் தப்பிக்க வைத்தான்.?

புதிர் விடை :

இந்த அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அவரைக் கொன்ற பழி என்னைச் சாரும். ஆகையால் இவர் நல்லவராக இருந்தால், இறைவா! இந்த வாளை மரவாளாக மாற்று" என்று சொல்லியிருப்பான். 

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்