புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Monday, January 14, 2013

கோபத்தில் வெளியிடப்படும் வார்த்தைகள் உயிரை கூட எளிதாக எடுத்துவிடும் !!!


ஒரு ராணுவ வீரன் தனக்கு திருமணமான உடன் பட்டாளத்துக்கு சென்று விட்டான். அவன் சென்ற சில மாதங்களிலே அவன் தந்தையான விவரம் தெரிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பத்து வருடங்கள் கழிந்து அவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது அவனது மனைவி மிகுந்த ஆர்வத்துடன் அவனை வரவேற்றாள். அன்னையின் பின்னே சற்றே மிரண்ட விழிகளுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான். தன் மகன் என்று உரிமையோடும் பெருமையோடும் அவனை பார்த்து கொண்டிருக்கும் போது அவன் தந்தையை கண்டு கொள்ளவே இல்லை. 

அவன் மனைவி அங்கிருந்து அகன்றதும் சிறுவன் வந்து வீரனிடம், நீங்கள் யார் என்று வினவினான். சற்றே அதிர்ச்சியடைந்தாலும், வேடிக்கை போல், கண்ணா நான் தான் உன் அப்பா என்றான் அவன். உடனே சிறுவன் கூறினான், இல்லை நீங்கள் இல்லை என் தந்தை. என் அப்பா எப்போதும் என் அம்மா கூடவே இருப்பார். அவள் நடந்தால் நடப்பார், அமர்ந்தால் அமர்வார் என்றான். வீரன் திகைத்து போய் விட்டான். சற்று நேரம் கழித்து வந்த மனைவியை வெறித்து நோக்கினான். பின்பு, அவன் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவே இல்லை. இதை கவனித்த மனைவிக்கு தாள முடியவில்லை. வாய் விட்டே கேட்டு விட்டாள் தன் அன்பு கணவனிடம். அதற்கு அவன், இவ்வளவு நாள் வந்தவன் வரவில்லை என்று என்னிடம் வந்தாயாக்கும் என்று கேட்டு விட்டான். இந்த சொல் கேட்டு அவள் உடனே தன உயிரை விட்டு விட்டாள். 

அவள் இறந்த ஈம கிரியைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவனுக்கு அவனது மகனின் செயல்கள் விசித்திரமாய் இருந்தது. அங்கும் இங்கும் தேடி கொண்டே இருந்தான். ஏற்கனவே இருந்த கோப கனல் முழுதும் அவன் மேல் திரும்பி என்னடா தேடுகிறாய் என்றான். அவன் அப்பாவை காணவில்லை என்றான். வீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன உளறுகிறாய் என்றான். அதற்கு அவனது நிழலை காட்டி. இவரை போல் ஒருவர் அம்மாவுடனே இருப்பார். அவர் தான் என் தந்தை. அம்மா தான் கூறினார்கள். இதோ இவர் தான் உன் தந்தை என.

தந்தையின் பிரிவு மகனை பாதித்து விட கூடாதென எண்ணி அவள், தன் நிழலை காட்டி இதுவே தந்தையென நம்ப வைத்திருந்தாள் அந்த சிறுவனை. ஏதும் அறியாது சந்தேகத்தால் தன் இல்லாளை வார்த்தையால் கொன்று விட்ட அந்த வீரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

வெனிஸ் நகரம் உருவான கதை உங்களுக்கு தெரியுமா?


இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள வெனிஸ் நகரம் பலருக்கும் தெரிந்த நகரம். இந்நகரத்தின் வணிகன் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் பற்றியும் அதில் வரும் ஷைலொக் எனும் வட்டிக்காரன் பற்றியும் பலரும் அறிந்திருப்பர். அந்நகரின் தெருக்களில் கார் ஓட முடியாது.

படகுதான் மிதந்து செல்லும் என்பதும் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் படகு வைத்து ஓட்டுகிறார்கள் என்பதும் தெருக்கள் என்பவையே நீர் ஓடும் வாய்க் கால்கள் தாம் என்பதையும், பலரும் தெரிந்து வைத்திருப்பர்.

அப்படியானால் நகரம் நீரின் மேல் கட்டப்பட்டதா? நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழந்ததா?பொது ஆண்டுக்கு 400 – 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறியவர்கள் தேர்ந் தெடுத்த இடமே நீர் நிறைந்த சதுப்பு நிலம்தான். ரோமானியப் பேரரசு நாடோடி இனத்தவரால் தாக்கப்பட்டு சிதைந்த பிறகு தெற்கு நோக்கி ஓடிவந்த மக்கள்தான் வெனிஸ் நகரில் குடியமர்ந்தனர்.

எதிரிகளின் படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் உபாயமாக இப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இங்கு மீன்பிடிப்பவரின் சிறு குடிசையைக் கூடக் கட்ட முடியாத நிலையில் சதுப்பு நிலம் காணப் பட்டது. பிறகு எங்கே கல்லா லான கட்டடங்களைக் கட்டுவது? ஆனாலும் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

ஆகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீளமான தூண்களைப் பூமியில் நட்டு கட்டடங்களைக் கட்டலாம் எனத் தீர்மானித்து தூண்களைப் புகுத்தி அடியில் உள்ள பாறைத்தரையைக் கண்டறிந்து அதன்மீது கட்டடம் கட்டலாம் என முயன்றனர். வெற்றி பெற்றனர். ஆனாலும் இது ஏதோ ஒரு சில மாதங்களில் வருடங்களில் நடந்த கதை அன்று.

பல நூற்றாண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற்றனர்.

ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்று சொல்வார்கள். அந்த வசனம் வெனிஸ் நகருக்கு மிகவும் பொருந்தக் கூடியது. வரலாற்றின் மத்தியக் காலத்தில்தான் கல்லாலான கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான அடித்தளமே ஆச்சரியம் தரக்கூடியது.

மிக நீளமான பைன் மரங்களும் லொர்ச் மரங்களும் வெட்டப்பட்டு அப்படியே சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன, வெண்ணெயில் தீக்குச்சிகளை நெருக்கமாக நட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரங்கள் நடப்பட்டு சதுப்பு மண் மறைக்கப்பட்ட மேலே அமைந்த சமதளத்தின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன. உண்மையில் சொன்னால், வீட்டைக் கட்டிப்பார் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும்.

வீடு கட்டியாகிவிட்டது. நீர் இருந்து கொண்டே இருந்ததை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்விக்கான பதிலாக வடிகால் அமைப்பு முறையைக் கண்டுபிடித்தனர். சிந்து வெளி நாகரிகத்திற்குச் சொந்தக்காரரான திராவிடர்கள் வடிகால் முறையைக் கண்டுபிடித்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஐரோப்பியர்களுக்கு அது பிடிபட்டு ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன.

நீர் மேற்பார்வையாளர் பதவியில் இருந்த கிரிஸ்டோ போரோ சபாடினோ என்பவர்தான் இம்முறையை ஒழுங்குபடுத்தி வாய்க்கால்களைச் சீரமைத்தார். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதைப்போல அவனவன் இஷ்டத்திற்கு வடிகால் வாய்க்கால்களை வெட்டவிடாமல் ஒழுங்குபடுத்தினார். வெனிஸ் நகரம் அழகே உருவான நகரமாக உருவாகப் பெரிதும் உதவினார்.

யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?


அரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.

பதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்