புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, May 11, 2013

தேனீக்கள் பல வகை - தேனீக்கள் பற்றிய ஒரு அலசல் !


தேனீக்களிடம் இருந்து தேன் மட்டுமன்றி அதைவிட விலை மதிப்புள்ள பொருள்களான மெழுகு, அரசக்கூழ், மகரந்தம் போன்றவையும் கிடைக்கின்றன. தேனீக்களில் பல வகைகள் உள்ளன.

மலைத் தேனீ: இவை உருவத்தில் மற்ற தேனீக்களான கொம்புத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீக்களை விட பெரியவை. 

இவை திறந்த வெளியில் கூட்டினை உயர்ந்த மரக்கிளைகள், பாறைகள், அணைக்கட்டுகள் மற்றும் பெரிய கட்டடங்களில் கட்டுகின்றன. உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் ஒரே மரத்தில் பல தேன் கூடுகளைக் காணலாம்.

அடையின் மேற்பகுதியானது தேன் சேமிப்பிற்கும், அடிப்பகுதி புழு வளர்ப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தொந்தரவு செய்தால், கோபத்துடன் அதிக தூரம் துரத்திச் சென்று கொட்டும் தன்மை உடையது. 

இவை திறந்த வெளியில் மட்டுமே வாழ விரும்புவதால் இவற்றை தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது.

இவை அதிக விஷத்தன்மை கொண்டது. மலைத்தேனீக்களால் அதிகளவு மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 

ஒரு ஆண்டிற்கு மலைத்தேனீ அடையில் இருந்து 35 கிலோ தேன் கிடைக்கும். இது தவிர மெழுகும் அதிகளவில் கிடைக்கின்றன.

கொம்புத்தேனீ: இவை உருவத்தில் சிறியவை. எனவே, இவை சிறு தேனீ என்றும் அழைக்கப்படுகின்றன. 

மலைத்தேனீக்களைப் போல அடையினை மரக்கிளைகளிலும், புதர்களிலும் திறந்த வெளியில் கட்டுகின்றன. இவற்றையும் நாம் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது. இதன் அடையிலிருந்து ஆண்டுக்கு ஒரு கிலோவுக்கு குறைவாகவே தேன் கிடைக்கும்.

இந்தியத் தேனீ: தமிழ்நாட்டின் தென்மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் அதிகளவில் பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுவது இந்தியத் தேனீயாகும்.

இவை தேனடைகளை அடுக்கு அடுக்காகக் கட்டுவதால் இவற்றிற்கு அடுக்குத் தேனீ என்ற பெயரும் உண்டு. இவை இருட்டில் மட்டுமே வாழும் இயல்புடையது. இவை அடைகளை அடுக்கடுக்காக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், பாழடைந்த கிணற்றுச் சுவர்கள் போன்றவற்றில் கட்டுகின்றன.

இந்தத் தேனீக்களைக் கோபப்படுத்தினால் கூட்டை விட்டே ஓடிவிடும் இயல்பு உடையது. அதிக தொந்தரவுக்கு உள்ளாகும்போது கொட்டுகின்றன. இவை தேனீ வளர்ப்புக்கு ஏற்ற ரகமாகும். இந்தியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 2 முதல் 5 கிலோ வரை தேன் கிடைக்கும்.

இத்தாலியத் தேனீ: இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அதிக தேன் தரக்கூடிய அடுக்குத் தேனீ வகையைச் சேர்ந்தது இத்தாலியத் தேனீயாகும். 

இவை அடைகளை இருட்டில் அடுக்கடுக்காகக் கட்டக்கூடியது. இவை வட இந்திய மாநிலங்களில் அதிகளவில் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. 

சாந்தமான குணம் உடையவை. 2 கி.மீ. தொலைவு வரை பறந்து சென்று மதுரம், மகரந்தம் மற்றும் பிசின் போன்றவற்றை சேகரிக்கின்றன. மலர்கள் அதிகமுள்ள தோட்டங்களில் மட்டுமே இவற்றை வளர்க்க இயலும். இத்தாலியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 40 கிலோ வரை தேன் கிடைக்கும்.

கொசுத்தேனீ: இவை கொசு போன்று உருவத்தில் மிகவும் சிறியவை. இவற்றால் கொட்ட முடியாது. ஏனெனில் இவற்றின் கொடுக்குகள் வளர்ச்சி குன்றியிருக்கும். 

மாறாக கடிக்கும் திறன் உடையவை. இவைகள் மரப்பொந்துகள், கல் மற்றும் மண் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் இடுக்குகளில் மண், மரப்பிசின் மற்றும் மெழுகு கொண்டு கூடு கட்டுகின்றன. இவற்றின் அடைகள் சிறிய திராட்சைக் குலை போல் காணப்படும்.

இதன் தேனானது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கூட்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 100 கிராம் தேன் மட்டுமே கிடைக்கும். 

இவற்றை மூங்கில் குழாய்களிலும், சிறிய மண்பானைகளிலும் வளர்க்கலாம். பயிர்களின் மகரந்தச் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன

மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை


மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை

உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. 

அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து  போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது.

ELLP என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும்.

ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர். 

இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள். 

ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. 

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.

நன்றி : தன்னம்பிக்கை முகபுத்தக குழு 

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்