புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Monday, December 23, 2013

கொக்குக்கு ஒரு கால்தானே ! - புதிர் கதை

கொக்குக்கு ஒரு கால்தானே ! 

வேட்டைக்குச்சென்று திரும்பிய முதலாளி ஒருவர் வேட்டை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தான் வேட்டையாடிக் கொண்டுவந்திருந்த ஒரு கொக்கைச் சமையல் காரரிடம் கொடுத்து , இரவு உணவுக்கு சுவையாகச் சமைத்து வைக்கும்படி கூறினார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உறித்து, பக்குவமாக மசாலா போட்டுக் குழம்பு வைத்தான்.நன்றாக வெந்ததும், குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.ஆசை அடக்க முடியாமல், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தவன், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கால் முழுவதையும் தின்றுவிட்டான்.உண்ட பின்புதான், முதலாளி கேட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது. சரி...சரி எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தெம்பாக இருந்தான்.


சாப்பாட்டு நேரம் வந்தது. முதலாளியும் சாப்பிட வந்து அமர்ந்தார்.சோறு போட்டு, கறிக்குழம்பை பறிமாறினான் சமையல்காரன்.சாப்பிட ஆரம்பித்த அவர், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தார்.மிகுந்த சுவையாக இருந்ததினால், அடுத்த காலையும் போடச் சொன்னார்.

திகைத்தான் சமையல்காரன். என்ன பேசுவது என்று ஒரு கணம் யோசித்தான்.பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, " ஐயா.....கொக்குக்கு ஒரு கால்தானே இருக்கும். நீங்கள் பார்த்ததில்லையா?...எப்படி இல்லாத ஒரு காலைக் கொண்டு வரமுடியும்" என்றான்.

அப்போது சமையல்காரனுடன் வாதிட விரும்பாத முதலாளி, " சரி நாளைக்குக் காலையில் கொக்குக்கு ஒரு கால்தானா? இல்லை இரண்டு கால்களா என்பதைப் பார்த்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டு உணவை முடித்தார்.

மறுநாள் காலையில், வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வயல் வெளிப்பக்கமாகப் போனார் முதலாளி. அங்கே குளக்கரைப்பக்கம் இருந்த ஒரு சிறு ஓடையில் கொக்குகள் நின்றிருந்தன.. சமையல் காரனிடம் கொக்குகளைக் காட்டிய முதலாளி " இப்போது நன்றாகப் பார். கொக்குக்கு எத்தனை கால்கள்" என்று கேட்டார்.

"இஅயா...நீங்களே நன்றாகப் பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரு காலில்தானே நிற்கின்றன.
எனவே கொக்குக்கு ஒரு கால்தான்" என்றான் சமையல்காரன்.

"அப்படியா" என்று சிரித்த முதலாளி, சூ....என்று கூறி கொக்குகளை விரட்டினார்.. ஒரு காலில் நின்றிருந்த கொக்குகள் எல்லாம், இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி வானத்தில் எழும்பிப் பறந்தன.

சமையல்காரனை கேலிப் புண்ணகையுடன் பார்த்த முதலாளி " இப்போது என்ன சொல்கிறாய். கொக்குக்கு எத்தனை கால்கள். ஒரு காலா.....அல்லது இரண்டு கால்களா?" என்றார்.

முதலாளி இப்படிக் கேட்டதும் ஒரு கணம் திகைத்த சமையல்காரன் தனது சாதுர்யமான பதிலைக் கூறியதும், முதலாளிக்கு சமையல்
காரன்மேல் இருந்த கோபம் எல்லாம் பறந்துபோனது.

அவனது பதிலை ரசித்துச் சிரித்த முதலாளி, அவன் செய்த தவறை மன்னித்தார்.

நண்பர்களே...................நீங்கள் கூறுங்கள். முதலாளிக்கு சமையல்காரன் என்ன பதில் கூறியிருப்பான்.?

புதிர் விடை :


"ஐயா.....இப்போது நீங்கள் கொக்கைப் பார்த்து சூ........ என்றதும் ஒரு கால், இரண்டு கால்களாக மாறியதே?...அதேபோல நீங்கள் உணவருந்தும்போதும் சூ என்று கூறியிருந்தால் ஒருகால் இரண்டு கால்களாக மாறியிருக்கும்" என்றான்.

ஒரு பேரரசன், ஒரு சிற்றரசன் மற்றும் அவர்களின் வாக்குவாதம் ! - புதிர் கதை

 ஒரு பேரரசன், ஒரு சிற்றரசன் மற்றும் அவர்களின் வாக்குவாதம் ! 

முன்னொரு காலத்தில் ஒரு பேரரசன் தனக்குட்பட்ட சிற்றரசன் ஒருவனது நாட்டுக்குச் சென்றான்.. சிற்றரசனும் அவனுக்கு பெரும் வரவேற்பு அளித்து மரியதை செலுத்தினான். அரண்மனையில் இரு அரசர்களும் அமர்ந்து மகிழ்வுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது பேரரசன், " நண்பரே....உமது நாட்டு முதலமைச்சன் அறிவிற் சிறந்தவர் என்று கேள்விப்பட்டேன். அது உண்மைதானா?" என்று கேட்டான்."உண்மைதான் அரசே"....என்று பதில் கூறினான் சிற்றரசன்.

"அப்படியானால் அந்த அமைச்சனை அழைத்து நம் இருவருக்கும் பால் கொண்டுவரச் சொல்லுங்கள்.!!!!அவன் உண்மையில் அறிவுடையவன்தானா என்பதை நான் கண்டுபிடித்துவிடுகிறேன்" என்றான் பேரரசன்.

உடனே சிற்றரசன் தனது அமைச்சனை அழைத்தான். அவர்கள் இருவரும் அருந்துவதற்குப் பால் கொண்டு வரச்சொன்னான். 

அமைச்சனும் அழகான தங்கத் தட்டில் இரண்டு கோப்பைகளில் பால் ஊற்றி அங்கே எடுத்து வந்தான்.


அப்போதுதான் அமைச்சனுக்கு பால் தட்டை யாரிடம் முதலில் நீட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது."நாம் நமது அரசரிடம் முதலில் 

தட்டை நீட்டினால், பேரரசன் தன்னை அவமானப் படுத்தியதாக நினைத்து கோபம் கொண்டு என்னைக் கொண்று விடுவான். அப்படி இல்லாமல் முதலில் பேரரசருக்குக் கொடுத்தால், நமது அரசன் அவனை அவமானம் செய்ததாக நினைத்து என் தலை எடுத்தாலும் எடுத்துவிடுவான்.என்ன செய்வது. ? இந்த சிக்கலை எப்படிச் சமாளிப்பது?" என்று சிந்தனை செய்தான்.

குறுநில மன்னனுக்கும் அமைச்சனின் சிக்கலான நிலை தெரிந்தது.இருந்தாலும் அமைச்சன் இதை எப்படிச் சமாளிக்கிறான் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அமைதியாக இருந்தான்.பேரரசனும் அமைச்சன் என்ன செய்யப்போகிறான் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்தான்.

ஆனால் அமைச்சன் அடுத்து செய்த செயலால் இரு அரசர்களுமே மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள்.இருவருக்குமே ஒரே சமயத்தில் பெருமை சேர்க்கும் வண்ணம் அமைச்சன் செயல் அமைந்ததினால் இருவருமே மகிழ்வுடன் அமைச்சனுக்கு பெரும் பரிசுகளை வழங்கினார்கள்.


மன்ற நண்பர்களே.......அமைச்சன் அந்த சிக்கலை எப்படிச் சமாளித்தான்

புதிர் விடை :

சிற்றரசரிடம் இருகோப்பை உள்ள தட்டை கொடுத்து... அவரை பேரரசருக்கு கொடுக்க சொல்லியிருப்பார் 

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் ! - புதிர் கதை

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் !

ஒரு அரசனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.. இரண்டுமே ஆண் குழந்தைகள்.  இருவரில் யார் மூத்தவன் யார் இளையவன் என்று யாருக்குமே தெரியாது.இருவருமே அறிவில் சிறந்தவர்களாக விளங்கவேண்டும் என்று அரசன் ஒருவனுக்கு அறிவழகன் என்றும் மற்றவனுக்கு மதியழகன் என்றும் பெயர் சூட்டியதோடல்லாமல், சிறந்த குருவிடம் அவர்களைக் கல்வி பயில ஏற்பாடு செய்தான். 

இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளைஞர்கள் ஆனார்கள்.இருவருமே கல்வியிலும் வீரத்திலும் இனையாக சிறந்து விளங்கினார்கள். இவர்களில் யாருக்கு பட்டம் சூட்டுவது, தனக்குப் பின் அரியனையில் அமர்த்துவது என்று பெரிதும் சிந்தித்தான் அரசன்.அவனால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

அதனால் தனது மூத்த அமைச்சரை அழைத்தான். " அமைச்சரே, அறிவுள்ள நீங்கள்தான் எனது குழப்பம் தீர வழி காட்ட வேண்டும். இருவரில் யாரை அரியனையில் அமர்த்துவது என்று நீங்கள் ஆராய்ந்து கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
அமைச்சர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

"அரசே.....இளவரசர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தகுதி உடையவர் எனது குநாதர்தான். அவர் இங்கிருந்து, பத்துக் கல் தொலைவில் உள்ள அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் தங்கி வாழ்ந்து வருகிறார். அவரிடம் உங்கள் முத்திரை மோதிரத்தைத் தருவோம்.அம்மோதிரத்தைப் பெற்று வறுமாறு இளவரசர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அனுப்பி வைப்போம்.என் குருநாதர் அவர்களின் புத்தி கூர்மையைச் சோதனை செய்து, தகுதியானவரிடம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்புவார்.முத்திரை மோதிரத்தைக் கொண்டு வருபரே அரியனையில் அமரத் தகுதியானவர் என்று நாம் கொள்வோம்" என்றார்.


அரசனும் இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டான்.மதியழகனை அழைத்தார்.அவனிடம் விபரம் கூறி அமைச்சரின் குருவைச் சந்தித்து, அவரிடம் தான் கொடுத்துள்ள முத்திரை மோதிரத்தைப் பெற்று வரும்படி அனுப்பி வைத்தான்.

மதியழகன் அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம் சென்றான். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். தனக்குத் தானே சிரித்துக்கொண்டு, ஏதேதோ பேசிக்கொண்டு அவர் இருந்தார். அவரிடம் சென்ற மதியழகன், " எங்கே அந்த முத்திரை மோதிரம். என்னிடம் கொடு . நான் அரசனின் மகன். முத்திரை மோதிரத்தை வாங்கிப் போவதற்காக வந்திருக்கிறேன்" என்றான்.

அங்கிருந்தவரோ சிரித்துக்கொண்டே , " இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று ஒன்றுக்கொன்று சம்பத்தம் இல்லாமல் கூறிக்கொண்டே இருந்தார்.

மதியழகன் எத்தனையோ முறை கேட்டபொதும், அவனுக்கு இந்த பதிலையே கிளிப்பிள்ளை கூறுவதுபோலக் கூறிக்கொண்டிருந்தார்.அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குத் திரும்பினான். அரசர் கேட்டதற்கு, " அப்பா....அங்கே ஒரு பைத்தியக்காரந்தான் இருக்கிறான். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் எதோ உளறிக்கொண்டிருக்கின்றான்" என்றான்.

அரசன் அடுத்தாற்போல் அறிவழகனை அனுப்பிவைத்தார். அறிவழகன் அந்த ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தான்."ஐயா முத்திரை மோதிரம் வேண்டும்" என்று கேட்டான்.அவனுக்கும் "இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று கூறினார். 

இதைக் கேட்ட அறிவழகன், இவர் கூறுவதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று ஊகித்தான்.அந்தப் பொருளைக் கண்டுகொண்டால், முத்திரை மோதிரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று புரிந்துகொண்டான்.தீவிரமாகச் சிந்தனை செய்தான்.முடிவில் முத்திரை மோதிரம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, மோதிரத்துடன் அரண்மனை வந்தடைந்தான். 

நடந்ததை அறிந்த அரசன் மிக்க மகிழ்வுடன், அறிவழகனையே இளவரசனாக பட்டம் சூட்டினான்.

நண்பர்களே மோதிரம் இருந்த இடத்தை அறிவழகன் எப்படிக் கண்டுபிடித்தான்.?

புதிர் விடை :


முனிவர் இருக்கும் இடத்தைத்தான் கூறியுள்ளார். அது ஆயிரம் கால் மண்டபமாதலால் அதிலிருந்த தூண் ஒன்றில் வைத்திருந்தார்.

இராவணனின் கடைசி முகம் - பத்தாவது
வீட்டைத் தாங்கி நிற்பது - தூண்
வேதத்தின் மற்றோர் தமிழ்ப்பெயர் - மறை
வேடனின் கையில் இருப்பது - வில்.

பத்தாவது தூண் மறைவில் இருந்தது முத்திரை மோதிரம்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்