புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, January 20, 2015

கடற்கரைப் பிள்ளையார் - சிறுகதை

கடற்கரைப் பிள்ளையார் - சிறுகதை 


கதையாசிரியர் : நிர்மலா ராகவன் 

1910

“டேய்! இந்தக் கல்லு முடியுமா, பாரு!”

“இதைத்தாண்டா இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்கோம். இனிமே இது வெறும் கல் இல்லே. சாமி!”

அந்தக் கருங்கல்லை ஒரு பெரிய மரத்தடியில் நட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சிவப்புத் துண்டை அதன்மேல் போர்த்தினார்ககள். மண் தரையில் விழுந்து, தலைமேல் கைகூப்பிக் கும்பிட்டார்கள்.

அவர்களது குறைகளையும், அற்பசொற்ப ஆனந்தங்களையும் பகிர்ந்துகொள்ள பிள்ளையார் வந்துவிட்டார் என்ற திருப்தியுடன், பிறரிடமும் அதைப்பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ளப் போனார்கள் அவ்விரு இளைஞர்களும்.

தீபகற்ப மலாயாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் காடாக இருந்த பகுதியில் ஒரு புதிய கோயில் இப்படித்தான் உருவாயிற்று.


1960

பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த இடம் சிமெண்டுக் காடாக, வீடுகளும், பள்ளிக்கூடங்களும், ஓரிரு மருத்துவசாலைகளும் அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அக்கம்பக்கத்தவர் நாடி வந்த அந்த பிள்ளையார் கோயிலும் வெறும் மரத்தடியாக இல்லாமல், செங்கல்லும், சிமெண்டும் சேர்ந்து, தூண் வைக்கப்பட்ட மண்டபமாக மாறியிருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முட்டை வடிவக் கல்லாக இருந்த பிள்ளையார் இப்போது யானை முகத்துடன் வீற்றிருந்தார். சரிகை போட்ட வேட்டியில் கம்பீரமாக இருந்தார்.

நாட்டின் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, பௌத்த மதத்தைச் சேர்ந்த சீன இனத்துப் பக்தர்களுக்கும் `டோடோ` (TOTO) என்ற லாட்டரிவழி, ஒரு காகிதத்துண்டில் அவர்கள் குறித்துக் கொடுத்த நான்கு எண்களில் சிலவற்றையாவது சரியாக வரும்படி செய்து, தனக்கும் நல்ல வரும்படி தேடிக்கொண்டார். மாதமுழுவதும் பணத் தட்டுப்பாடு இல்லாமல் செய்த கடவுளுக்கு எல்லாரும் அள்ளிக் கொடுத்தனர். ஏதாவது ஒரு காரியம் கைகூட அதிகாரிகளுக்குக் கொடுப்பதில்லையா? அந்த வழக்கம்தான்.

ஒருவர் மட்டும்தான் பிள்ளையாரைப் பார்த்து வயிற்றறிச்சல் பட்டார்.

அவர் — கணபதி. எல்லாம் தான் மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை இந்த குண்டுப் பிள்ளையார் உட்கார்ந்த இடத்தில் சதுர்த்தி தினங்களிலோ, அல்லது ஓரிரு வெள்ளிக்கிழமைகளிலோ சம்பாதித்து விடுகிறாரே என்ற ஆற்றாமைதான்.

`ம்! இவருக்கும் என் பெயர்தான். இவருடைய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தால்!`என்று தனக்குள் பொருமியவற்கு ஒரு உத்தி தோன்றியது. பிள்ளையாருடன் கூட்டு சேர்ந்துகொண்டால்?

தான் நினைத்ததைச் சாதிக்க முதல் படியாக, அனுதினமும் கோயிலுக்குத் தவறாது வந்தார் கணபதி.

நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டபடி, “பிள்ளையாரப்பா! பிழைக்கும் வழியைச் சொல்லப்பா!” என்று பலர் காதிலும் படும்படி மனமுருகி வேண்டினார். ஏதாவது பண்டிகை வந்தால், வா¢ந்து கட்டிக்கொண்டு, பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை என்று (பிறர் கொண்டுவந்த) பிரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகிக்கவும் கணபதி தவறவில்லை.

சில மாதங்களிலேயே, கோயிலுக்கு வருகிறவர்களுக்கு, பிள்ளையாருக்கு அடுத்தபடி கணபதிதான் மிகவும் தெரிந்தவரானார்.

கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டபோது, எவ்வித தடங்கலும் இல்லாது, தலைவராக கணபதி தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமென்ன?

முதலில் ஒரு சொந்த வீடு வாங்கினார், “சாமி! ஒனக்கு நிரந்தரமா தங்க ஒரு இடம் இருக்கிறமாதிரி ஒன் பக்தனுக்கும் வேணாமா?” என்று முறையிட்டுவிட்டு. தான் செய்வது தவறில்லை என்று அந்த கோரிக்கையிலேயே சமாதானம் ஏற்பட்டது.

“ஒனக்கென்னப்பா! மனைவியா, பிள்ளைக்குட்டியா! ஒரு பிடுங்கல் இல்ல!” என்று அங்கலாய்க்க, அடுத்த கட்டமாக, மனைவியின் வங்கிக்கணக்கு எகிறியது.

நல்ல வேளை, பிள்ளையார் இளைக்க வழி இருக்கவில்லை.

அர்ச்சனை, உண்டியல் ஆகியவற்றால் கிடைத்த பணம்தான் நம் வீட்டுக்குத் திருப்பப்படுகிறது என்று சந்தேகமறப் புரிந்ததும், “சாமி குத்தம்ங்க!” என்று பயந்த மனைவியிடம், “அடி பைத்தியமே! நமக்குக் குடுக்கத்தானே சாமியே இருக்காரு! இல்லாட்டி, ஒனக்கு ஒரு டஜன் தங்க வளையலுங்கதான் வாங்க முடியுமா?” என்று கணபதி விவரிக்க, அவள் அடங்கிப் போனாள்.

1997

`வர வர, எல்லாரும் கஞ்சனாயிட்டானுங்க!` என்று மனத்துக்குள் வைதுகொண்டார் கணபதி.

நாட்டில் பொதுவாகப் பரவியிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு கோயிலையும் விட்டு வைக்கவில்லை. கணபதியின் பேராசைக்கு உண்டியல் பணம் ஈடு கொடுக்கமுடியாது போயிற்று.

அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை விளங்கியது: ஒரு சந்நதி, ஒரு உண்டியல் என்று இருப்பதால்தானே வரவு இவ்வளவு குறைவாக இருக்கிறது!

அடுத்த கூட்டத்தில், “நம்ப கோயிலுக்குச் சொந்தமா இவ்வளவு பெரிய நிலம் இருக்கு. பிள்ளையார், பாவம், தனியா இருக்காரு. அவரோட தம்பி முருகனுக்கும் ஒரு சந்நதி கட்டினா என்ன?” என்று, தொண்டையைக் கனைத்தபடி ஆரம்பித்தார்.

அவருடன் பங்கு சேர்ந்துகொண்டிருந்த மைத்துனர், “அருமையான யோசனை, மாமா. அப்படியே அவங்க அப்பா நடராஜனுக்கும், அம்மா சிவகாமிக்கும் சேர்த்தே கட்டணும்!” என்று ஆமோதித்தார்.

இன்னொருவர் அப்பாவித்தனமாக, “தில்லை நடராஜனே நமக்காக கடல் கடந்து மலேசியாவுக்கு வந்து தரிசனம் குடுக்கிறாருன்னு செய்தி பரப்பினா, நிறைய பேர் நம்ம கோயிலுக்கு வருவாங்க,” என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார்.

கோயிலை விரிவு படுத்துவதென்றால் சாமானியமா?

அந்த கைங்கரியத்துக்காக பக்தர்கள் உண்டி குலுக்கினார்கள், வீடு வீடாகச் சென்று. எதிர்பார்த்ததற்கு மேலேயே நிதி கிடைக்க, `போனால் போகிறது` என்று ஒரு கோபுரமும் கட்ட முடிவெடுத்தார் கணபதி. வரவு, செலவெல்லாம் அவர் கண்காணிப்பில்தான் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

எதிர்பார்த்தபடி, இரண்டு சந்நிதானங்களில் அமைந்த இரு உண்டியல்களால் நிறையப் பணம் கிடைக்கவில்லை. ஒன்றில் பணம் போட்டவர்கள், அடுத்த கடவுள் விக்கிரகத்துக்கு முன்னால் தரையில் விழுந்து கும்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டனர்.

கணபதி யோசிக்க ஆரம்பித்தார்.

2000

பிள்ளையார் கோயிலின் மகிமை சில ஆன்மிக சஞ்சிகைகளின் மூலம் அயல் நாடுகளுக்கும் பரவ, வெளிநாட்டவர்களின் வரவு அதிகரித்தது. அதிலும், இந்திய மொழி, அல்லது கலாசாரம் தெரியாத ஜப்பானியர்கள் போன்றவர்கள் வந்தால், அவர்கள் பிரத்தியேகமாகக் கவனிக்கப்பட்டார்கள்.
அதற்குக் காரணம் இருந்தது.

உள்நாட்டவர் அர்ச்சனைத் தட்டில் ஐம்பது காசு போட்டுவிட்டு, கடவுளிடம் அதற்கு ஈடாக ஐயாயிரம் ரிங்கிட் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தித்தனர். இந்தக் பேரமெல்லாம் அறியாத வெளிநாட்டவர்கள் ஐந்து, பத்து என்று பச்சை, சிவப்பு நிற ரிங்கிட் தாள்களை அள்ளி வீசினர்.

இனி நாம் பிழைக்க இவர்களை அண்டினால்தான் முடியும் என்று தீர்மானித்தார் கணபதி. கோயில் தலைவராக அவர் பதவியேற்று பல்லாண்டுகள் ஆகியிருந்தபோதும், அவரை எதிர்க்கும் துணிவு எவருக்கும் இருக்கவில்லை. அபூர்வமாக அவரைத் தட்டிக்கேட்ட ஓரிருவரும் சொல்லி வைத்தாற்போல் விபத்துக்குள்ளானார்கள். அதன் விளைவாக, `கணபதி தமது வலது கையாக இருப்பதைத்தான் பிள்ளையார் விரும்புகிறார். ஏனெனில், பெயர் பொருத்தம் மட்டுமின்றி, பெரிய பக்தராகவும், இடைவிடாது கோயிலை புதுப்பிக்க முடிவுகள் எடுத்து, அதற்காகக் கடுமையாக உழைப்பவராகவும் இருக்கிறார்` என்று செய்தி பரவிற்று.

கோயிலில் மண்டபங்களும், சந்நிதானங்களும் பெருக, வளாகத்தில் இருந்த அடர்ந்த மரங்களை வெட்டவேண்டியதாயிற்று. அங்கே வாழ்ந்து வந்த குரங்குக் கூட்டங்கள் கோயிலுக்குள்ளேயே வர ஆரம்பித்தன. குழந்தைகளும், பெரியவர்களும் அர்ச்சனை செய்து பெற்றிருந்த வாழைப்பழத்தையும், தேங்காய் மூடியையும் அந்தக் குரங்குகளுக்கு அளித்து மகிழ்ந்தனர். கருமித்தனம் செய்தவர்களின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு, தாவியோடின அம்மிருகங்கள்.

இந்த வேடிக்கையை தமது புகைப்படக் கருவிகளிலும், வீடியோ கேமராவிலும் பதிவு செய்த வெளிநாட்டவர்களைப் பார்த்ததும் கணபதியின் கற்பனை கரைபுரண்டோடியது.

`கேவலம், குரங்கையே பார்த்து பிரமிக்கிறார்களே! மேல் நாட்டில் இல்லாத பாம்பு, தேள், மயில் போன்ற பிற ஜீவன்களையும் இங்கு கொண்டுவர முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!` என்று எண்ணமிட்டார்.

இப்போது, கோயில் மிருகக் காட்சிசாலையாக மாறியது. கோயிலின் முன் பகுதியிலேயே முதலை, ஆமை, வண்ணப் பறவைகள் என்று பலவும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.

அவைகளுக்கெல்லாம் தீனி போட்டு, அந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள காசு வேண்டாமா?
வேடிக்கை பார்க்க வந்தவர்கள் நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே போனார்கள். பொழுது நன்றாகப் போனதால், டிக்கட்டின் விலை அர்ச்சனை சீட்டைவிட பன்மடங்கு அதிகம் என்பதை யாரும் யோசிக்கவில்லை.

பின்புறத்தில் முக்கியத்துவம் குறைந்துபோய் கிடந்தது கடவுள் சந்நதி.

2004

பிள்ளையார் அதிர்ந்தார். தான் வெறும் குழவிக்கல்லாக இருந்தபோது பக்தி செலுத்தி அகமகிழ்ந்தவர்கள் போக, இப்போது பெயரளவில் மட்டும் தாம் இங்கு குடியிருப்பது குறித்து அவருக்கு வேதனை உண்டாயிற்று.
தன்னை வைத்து வியாபாரமா?

கடவுள் படைத்த பிற உயிர்கள் இப்பாழும் மனிதர்களை எதிர்க்க இயலாது, சுதந்திரமாக ஓடவோ, ஊர்ந்து செல்லவோ இயலாது சிறு கூண்டுகளில் அடைபட்டிருப்பது என்ன கொடுமை!

அது போதாதென்று, அங்கு ஒரு மேடை வேறு. கடவுள் பாடல்கள் என்ற பெயரில் திரைப்படங்களில் ஒலித்த குத்து நடனங்களை இளம்பெண்களும், ஆண்களும் வலிப்பு வந்தவர்கள்போல ஆட, அந்த கர்ணகடூரமான ஓசையானது தெய்வ சந்நிதானத்தில் பக்தர்கள் சிலர் மனமுருகிப் பாடும் இசையை மீறுதாக இருந்தது. பாதி பூசை நடந்து கொண்டிருக்கும்போது, காற்றில் மிதந்து வந்த திரைப்படப் பாடல்கள் பலரையும் ஈர்த்து, அவர்கள் கவனத்தைக் குலைத்தது.

பிள்ளையார் அழாத குறை. “உலகம் இப்படிக் கெட்டுப் போச்சே, மாமா!” என்று நாரத்தில் அயணம் செய்துகொண்டிருக்கும் (அதாவது, நீரில் சயனித்துக்கொணடிருக்கும்) தாய்மாமன் நாராயணனிடம் முறையிட்டார்.

“நான் காத்தல் கடவுள்தான். ஆனால், இனியும் பொறுமையாக இருக்க என்னால் முடியாது,” என்று ஆர்ப்பரித்த விஷ்ணு, ” மருமகனே! நீ பூலோகத்துக்குப் போய் பட்ட பாடெல்லாம் போதும். இந்த ஆண்டின் இறுதியில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்,” என்று பூடகமாகச் சொன்னார்.

அவ்வருடம் டிசம்பர் இறுதியில் வந்த சுனாமி என்ற பேரலையால் அந்த வட்டாரமே, கணபதி குடும்பம் உட்பட, கடலுக்குள் அமிழ்ந்துவிட, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஒரே ஒருவர் நம் பிள்ளையார்தான்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்