புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Thursday, September 3, 2015

வாழைப்பழம் ஒரு முழு உணவு!

வாழைப்பழம் ஒரு முழு உணவு!


வாழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக் கதைகள் கூறுகின்றன. ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று, வாழைப் பழத்திலும் வைட்டமின் "சி’ காணப்படுகிறது. 


இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காரச் சத்து அதிகமாக இருப்பதால், உண்பவர்களின் உடலிலுள்ள, காரச்சத்தை பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட, இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு அதிகம். எனவே தானியத்திற்குப் பதிலாக, இதை உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள சர்க்கரைச் சத்து குடல் கிருமிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. ஆகவே இதை கிருமி நாசினியாகப் பயன்படுத்தி குடல் நோய்களை அகற்றலாம்.

கனிந்த பழத்துடன் சிறிது புளியையும், உப்பையும் கலந்து பிசைந்து உட்கொண்டால், சீதபேதி தீரும். சிறு குழந்தைகளுக்கு சீதபேதி ஏற்பட்டால், பழத்தை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொடுத்தால் நோய் தீரும். குன்மநோய், குண்டிக்காய் வீக்கம், கீல்வாதம், டைபாய்டு காய்ச்சல் முதலிய நோய்க் காலங்களில், வாழைப்பழத்தை அதிகமாகப் பயன்படுத்தி குணமடையலாம். 

குடற்புண் நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு, இப்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இளகிய மலம் உள்ளவருக்கும் இது நல்ல உணவாகும். வாழைப்பழத்தில் புரதச்சத்து அதிகமாக இல்லாததால், பாலுடன் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. காலையில் பாலும், பழமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். பாலையும், வாழைப்பழத்தையும் கலந்து உண்டு, ஒருவர் பல காலம் வாழலாம். உண்பதற்கு பழம் நன்கு கனிந்திருக்க வேண்டும். 

பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருந்தால் மாத்திரம் போதாது. நன்கு கனியாத பழங்கள் ஜீரண உறுப்புகளுக்கு கடினமாக இருப்பதோடு, அதிலுள்ள சர்க்கரைச் சத்தும் ஜீரணமடையப் பக்குவப்படாத நிலையில் இருக்கும். எனவே, நன்கு கனியாத பழங்களை உண்ணக்கூடாது. பழத்தின் தோலில் சில ரசாயனப் பொருள்கள் உள்ளன. தோலில் வெடிப்பு ஏற்படாத வரை, உள்ளிருக்கும் சதையை நன்கு பாதுகாக்கும் தன்மை மேற்சொன்ன ரசாயனப் பொருள்களுக்கு உண்டு; அதனால், கிருமிகள் அண்டாது. 

பழத்தின் தோலை நீக்கி வெயிலில், உலர வைத்து தூள் செய்து பல காலம் பத்திரப்படுத்தலாம். அப்பழத்தூளை பாலில் கலந்து, உண்பதால் அது முழு உணவாகிறது; சுவையாகவும் இருக்கும். பழத்தூளினால் ரொட்டி செய்து, குடற்புண் நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் கொடுக்கலாம். 
வாழைப்பழங்களில் செவ்வாழைப்பழம் மிகவும் சத்துமிக்கது. உடல் மெலிந்தவர்கள், நோயால் படுத்து உடல் மெலிந்தவர்கள், தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!


சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.


முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள். 

பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள். 

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம். 

வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். 

சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் காக்கும் காளான்!

உடல் ஆரோக்கியம் காக்கும் காளான்!


இந்தியாவில், 8 வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்கு, சிப்பி, வைக்கோல் காளான் என்ற, 3 வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 

காளான் மருத்துவ பயன்கள்: காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள டிரைகிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. 


இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை, எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. 

இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன், இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால், சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய, பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம், 9 மி.கி., உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. 

காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான், மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக, காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. 

எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால், விரைவில் உடல் தேறும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

அழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ!

அழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ!


பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முடி அழகு பெறும். 


தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் பரு வராமலும், வெளியில் கறுத்துப் போகாமலும் இருக்கும்.

ஒரு லிட்டர் இளஞ்சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், 
சுருக்கத்துடனும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். 

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன், பயத்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். 

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால், முட்டையுடன் முடியும் எளிதில் வரும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புது பொலிவடையும். 

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். 

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும். 

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை


புதுடில்லி : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பேறுகால விடுமுறை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


விடுமுறை இல்லாத காரணத்தினால் பெண்கள் பலர் குழந்தை பிறந்த உடன், உடனடியாக வேலைக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை மனதில் கொண்டு மத்திய அமைச்சர் மேனகா, வேலைக்கு செல்லும் பெண்களின் மகப்பேறு விடுமுறையை 3 மாதத்தில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார்.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் கூறுகையில், தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம். இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலகத்திடம் மட்டுமின்றி, அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறையிடமும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து

பாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து


பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர். 

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும். 

பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். 

ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள். பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள். 

பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். 

அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

மேற்கூறியவற்றை தினமும், நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக மாறும்.

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?


தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பலருக்கு தெரிவதில்லை. உடனே தீயை அணைக்க வேண்டும் என்பதற்காக, என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் பதற்றத்தில் செய்து விடுவர். பாதிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தீ விபத்து என்பதை பொறுத்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயால் தீப்பற்றி இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதே போல் தீப்பற்றும் போது அணிந்திருக்கும் ஆடையும், பாதிப்பின் தீவிரத்தை முடிவு செய்கிறது. சரி, தீப்பற்றிக் கொண்டால் என்னதான் செய்ய வேண்டும்? 


துணியில் தீப்பற்றிக் கொண்டால், அங்குமிங்கும் ஓடக்கூடாது. உடனே நின்று, உடைகளை களைந்து, தீ அணையும் வரை, மண்ணில் உருளவும்; கம்பளி போன்ற கனமான போர்வையை உடலில் சுற்றி, தீயை அணைத்து விட வேண்டும். ஓடினால், தீ இன்னும்  பரவும் வாய்ப்பு உள்ளது. மூடிய கதவுகளை திறக்கும் முன்பு, அவற்றின் வெளிப்புறத்தில், தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்வது அவசியம்.

அவசரத்தில் கதவை திறக்க நேரிட்டால், கதவின் தாழ்ப்பாள் விரிசல்களில், தங்கள் பின்னங்கையை வைத்து, பார்த்து சோதிக்கலாம். வெப்பத்தை அறிய உள்ளங்கையை பயன்படுத்தாதீர்கள். உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால், தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.  வீட்டுக்கு வெளியே வந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீயணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும். சிறிய தீயை அணைக்க, அவசர காலத்திற்கு, சமையல் சோடாவை பயன்படுத்தலாம். 

புகையானது, விட்டத்தை நோக்கி பரவுவதால், புகையுணர்வு கருவியை, உயரமான இடத்தில் பொருத்துவது நல்லது. புகை எச்சரிக்கை கருவி, பத்து ஆண்டுகளுக்கு மேல் பழுதாகிவிட்டால், புதிய கருவியை வாங்கி உபயோகிப்பது நல்லது. 

தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு, உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இத்துறைகளின் தொலைபேசி எண்களை, தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். தீ விபத்து நேர்ந்த இடத்தின், தெளிவான முகவரியையும், விரைவாக வந்து சேர சரியான வழியையும் தெரிவிக்கவும். தீயணைப்பான் எச்சரிக்கை மணி கேட்டதும், வழி ஏற்படுத்தி கொடுக்கவும்.

தீயணைப்பு படை, நெருப்பை அணைக்கப் போராடும் போது, அவர்களை தொல்லை செய்யாதீர்கள். மக்கள் நெரிசல் அதிகரித்தால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தடைபடும். தீ விபத்து நேர்ந்தால், கூச்சலிட்டு மற்றவர்களின் உதவியை நாடுவது நல்லது. விபத்திற்குள்ளான நபர்களை, உடனடியாக மருத்துவ உதவிக்காக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம். பாதுகாப்பும், எச்சரிக்கையும் மட்டுமே, தீ விபத்திலிருந்து பாதுகாக்கும்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்